சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் நவீன தொழில்நுட்ப வசதிகள், உபகரணங்களுடனும், வளாகங்கள் சுத்தமாக பராமரிக்கப்பட்டும் வருகிறது. இதனால், சென்னை பெருநகரிலுள்ள காவல் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, அங்கு பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் நல்ல முறையில் பணிபுரியவும், புகார் அளிக்க மற்றும் விசாரணைக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பெரும்பாலான காவல் நிலையங்கள் ஐஎஸ்.ஓ தரச்சான்றிதழ்கள் பெற்று, மேலும் சிறப்பாக செயலாற்றி வருகிறது.
காவல் நிலையங்களை மேம்படுத்தும் நோக்கத்தின் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் C-3 ஏழுகிணறு காவல் நிலைய வளாகத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி தகடுகளின் (Solar Panels) பயன்பாட்டினை 20.09.2023 அன்று பூக்கடை காவல் துணை ஆணையாளர் ஸ்ரேயா குப்தா , இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்தார்.
ஐசிஐசிஐ பவுண்டேஷன் ஆதரவுடன் C-3 ஏழுகிணறு காவல் நிலையத்தில் ரூ.7,24,402/- மதிப்பில் 10 KWp திறனுடனும் சூரியமின் சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், ஐசிஐசிஐ வங்கி நிர்வாகிகள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.