கோவை மாநகரம், பீளமேடு, புராணி காலனியில் வசித்து வந்த சபீர் தாயப்வாக் (வயது/66) என்பவரது வீட்டில், கடந்த 06.02.2024 ஆம் தேதியன்று இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் முன் கதவை இரும்பு கம்பிகொண்டு நெம்பி உடைத்து உள்ளே நுழைந்த குரங்கு குல்லா முகமூடி அணிந்த, அடையாளம் தெரியாத, நான்கு நபர்கள் கத்தி முனையில் வீட்டில் இருந்தவர்களை, கை கால்களை கட்டிப் போட்டு விட்டு, வீட்டில் இருந்த 29 சவரன் நகைகள்,2 வைரநெக்லஸ், வைரத்தோடு 1 ஜோடி, பணம் ரூ.10 லட்சம், 2 கைக்கடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பியோடிவிட்டனர். இது தொடர்பாக E2 பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், 09.07.2024 அன்று கோவை மாநகரம், சின்னியம்பாளையம், வெங்கிட்டாபுரம் சாலையில், கோவை மாநகர தனிப்படை காவல்துறையினர், ஹுண்டாய் கிரிட்டா காரில் வந்த மதுரை, கருப்பாயூரணியைச் சேர்ந்த மூர்த்தி (வயது/33), த/பெ. முருகன், என்பவரையும், அவரது கூட்டாளி மதுரை தெற்கு, பசுப்பொன் நகரைச் சேர்ந்த அம்சராஜன் (வயது/31), த/பெ. மாரிமுத்து, என்பவரையும் பிடித்து விசாரித்த போது மேற்படி நபர்கள் மேலே கண்ட வழக்கில் எதிரிகள் என தெரியவந்தது. மேலும், குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மொத்தம் 62 சவரன் நகைகள், 1 கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

காவல்துறை விசாரணையில் எதிரி மூர்த்தி என்பவர் மூளையாக செயல்பட்டதும், அவரது தலைமையில் 1) அம்சராஜன் (வயது 31), மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த 2) மனோஜ்குமார் (வயது/31), த/பெ. சாரங்கபாணி 3) சுதாகர் (வயது/32), த/பெ. கண்ணன் மற்றும் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த 4) சுரேஷ்குமார் மற்றும் 5) ராம்பிரகாஷ் ஆகியோர் தமிழகம் முழுவதும் 78 குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருப்பதும், தெரியவந்துள்ளது. இவ்வழக்குகளில் தொடர்புடைய சுரேஷ்குமார் ஏற்கனவே விருதுநகர் மாவட்ட காவல்துறையினரால் 15.06.2024-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி வழக்குகளில் திறமையாகச் செயல்பட்டு துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது
செய்த சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தனிப்படையினரை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர், சென்னை அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்கள்.