திருப்பூர் மாவட்டம் மங்கலம் சரகத்துக்குட்பட்ட இச்சிப்பட்டி அருகே நேற்று இரவு மங்கலம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிக்கப் வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

அவற்றை ஏற்றி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சுபின் குமார், பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மற்றும் சோலேஸ்வரன்பட்டி பகுதியை சேர்ந்த தங்கவேல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மங்கலம் அருகே தேவராயன்பாளையம் என்ற இடத்தில் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை செய்வதாக கூறி தனியாக வீடு எடுத்து கர்நாடகா மாநிலத்தில் இருந்து மளிகை பொருட்களை ஏற்றி வருவது போல் புகையிலை பொருட்களையும் மொத்தமாக வாங்கி வந்து, உடுமலை பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் தேவராயன்பாளையத்தில் சோதனை மேற்கொண்ட போது மூன்று பேரும் தங்கி இருந்த வீட்டில் நான்கு இலட்சம் ரூபாய் மதிப்பிலான 552 கிலோ குட்கா பொருட்கள் பதிக்கிவைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

குட்கா பொருட்கள் கடத்தி வருவதற்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் 552 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்துள்ளனர்.