திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக தேங்காய் ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மூட்டை மூட்டையாக தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து வாகனத்தில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து அவர்களை மங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது அவர்கள் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை மங்கலம் அருகே உள்ள குடோனுக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் வாகனத்தில் இருந்த சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1100 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.மேலும் இது தொடர்பாக மங்கலத்தைச் சேர்ந்த பக்ருதீன் (47),அப்துல் ரஹீம்(43), பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன்-(40) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த வாரம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 550 கிலோ குட்கா பொருட்களை இதே பகுதியில் பறிமுதல் செய்த நிலையில் வாகன சோதனையில் மீண்டும் 1100 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.