கடந்த 14.10.2024-ந் தேதி தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் தியாகதுருகம், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி ரங்கநாயகி(86) என்பவர் தலையில் தாக்கப்பட்டு அவர் மூக்கில் அணிந்து இருந்த 1/2 பவுன் நகை திருடப்பட்டு இறந்து கிடப்பதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் தியாகதுருகம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்கள் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தேவராஜ் மேற்பார்வையில் தியாகதுருகம் காவல் ஆய்வாளர் திருமதி.மலர்விழி மற்றும் கள்ளக்குறிச்சி உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.ஆனந்தராசு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அதன்படி தனிப்படை காவல்துறையினர் சம்பவயிடம் சென்று தடயங்கள் மற்றும் அருகில் உள்ள CCTV-களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் தியாகதுருகத்தில் இரவு நேரத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்த நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து மகன் சுரேஷ்(29) என்பவரை விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த அவரை காவல் நிலையம் அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் படுத்திருந்த ரங்கநாயகியை தலையில் தாக்கி கொலை செய்து அவரது மூக்கில் இருந்த மூக்குத்தியை திருடிச்சென்றது தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து மூக்குத்தியை பறிமுதல் செய்து விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.