தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் தங்கள் சேவையின் போது எதிர்நோக்கும் சவால்கள், உடல்நலக் குறைபாடுகள் மற்றும் பணிக்காலத்தில் நிகழும் துயரச் சம்பவங்களுக்கு எதிராக பாதுகாப்பாக இருக்க, காவலர் சேமநல நிதி உதவித் தொகை ஒரு முக்கிய ஆதரவாக விளங்குகிறது.
இத்தகைய நிதி உதவிகளை பெறுவதற்காக பலர் மனுக்கள் அளித்து இருந்த நிலையில், அவற்றை விரைந்து பரிசீலித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. அரவிந்த் அவர்கள், தேவையான நிதி உதவிகளை உரிய நபர்களுக்கு இன்று (19.05.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
இந்த நிகழ்வில் மருத்துவச் செலவுகளுக்கான நிதி, பணிக்காலத்தில் ஏற்பட்ட விபத்துகளுக்கான நிவாரணம் மற்றும் உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
இதையொட்டி பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. அரவிந்த் அவர்கள், “காவல்துறையினர் அனைவரும் தங்கள் கடமையை நேர்மையாகவும், தன்னலமில்லாமல் செய்துவருகிறார்கள். அவர்களின் நலனுக்காக அரசு மற்றும் காவலர் நல அமைப்புகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

அந்த நிதிகளை தேவையான நேரத்தில் அவர்களிடம் சேர்ப்பது தான் எங்கள் கடமை” எனக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பல அதிகாரிகள், காவல் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு நன்றியுடன் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வானது காவல்துறையினருக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.