தமிழக காவல் துறையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பதவி உயர்வு பட்டியல் வரும்  நிலையில் , வரப்போகும் பார்லிமென்ட் தேர்தல் நெருங்கும் வேலையில் முக்கிய  பதவியே வேண்டாம் என பல எஸ்.பி.க்களும், உயர் அதிகாரிகளும் அலறியடித்து ஓடும் சூழ்நிலை நிலவி வருவது ஆட்சியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தமிழக காவல் துறையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல்வாரத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில்   பதவி உயர்வு நவம்பர் மாத இறுதிவரைக்கூட இழுத்தடிக்கப்பட்டதும் உண்டு. ஆனால்  திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பதவி உயர்வு நெருங்கும்போது உணவு   கடத்தல் தடுப்பு பிரிவு,  அமலாக்கத்துறை, சிபிசிஐடி உள்ளிட்ட  துறைகளில்  டிஜிபி அந்தஸ்திலான  ஐபிஎஸ் அதிகாரிகளிடையே போட்டி நிலவியது.

இதேபோல ,   மண்டல ஐ.ஜி பதவிகளை  பிடிக்கவும்,சேலம்,  கோவை,காஞ்சிபுரம், திண்டுக்கல், உள்ளிட்ட சரக டிஐஜிக்கள் பதவிகளுக்கும் கடும் போட்டி நிலவியது. சென்னை, தாம்பரம், ஆவடி, திருப்பூர், கோவை, திருச்சி,, சேலம் உள்ளிட்ட மாநகரங்களில் கமிஷனர், துணை கமிஷனர் பதவிகளை பிடிக்கவும் கடும் போட்டியும், வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் எஸ்.பி.க்கள் பதவியை பிடிக்கவும் கடும் போட்டி நிலவியது. இந்த பதவிகளுக்காக ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள், அமைச்சர்கள் மூலம் முதல்வர் வட்டாரத்திற்கு பிரஷர் கொடுத்தனர். இந்த போட்டியில் பலர் வெற்றியும் பெற்றனர்.

இதேபோல இந்த ஆண்டும் முக்கிய பதவிகளுக்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் வரும் மே மாதம் நடக்க உள்ள பார்லிமென்ட் தேர்தல்களால் மாவட்ட எஸ்.பி.க்கள், சரக  டிஐஜிக்கள், மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி.க்கள் பதவிகளுக்கு செல்ல தயக்கம் காட்டுவதோடு யூனிட்டுகளில் தங்களுக்கு பதவிகள்  போட்டால் போதும் என டி.ஜி.பி.,யிடம் கேட்கத் தொடங்கிவிட்டனராம், காரணம் தற்போதைய அரசியல் காலகட்டத்தில் ஆளும்கட்சிக்கு எதிராக அதிமுக மற்றுமின்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். ஐ.டி, அமலாக்கத்துறை, சிபிஐ என பல்வேறு மத்திய அமைப்புகள் மூலம் ஆளும்கட்சி அமைச்சர்கள், எம்.பி.க்கள், மேலிடத்திற்கு நெருக்கமானவர்கள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வரும் தேர்தலிலும் பாஜக, அதிமுக உள்ளிட்ட காட்சிகள் வெற்றிக்கு கடும் போட்டியிடுவதோடு, ஆளும்கட்சிக்கு எதிராக சமூக ஊடகங்கள் மற்றும் யூ-டியூப் சேனல்கள் மூலம் தேர்தல் முறைகேட்டை அம்பலப்படுத்தி காவல்துறையை சிக்கலுக்கு ஆளாக்கிவிடுவார்கள். மத்தியில் ஆட்சி மற்றம் ஏற்படாமல் போனால் தங்கள் பதவிகளுக்கு ஆபத்தாகிவிடும் என யோசிக்க தொடங்கிவிட்டனர்.

தற்போதைய நிலவரப்படி 1994-ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரிகளான மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் தேவ் வான்கேடே, சஞ்சய் மாத்தூர் ஆகியோர் டிஜிபிக்களாக அந்தஸ்து பெற தகுதி பெற்றுள்ளனர். இதேபோல 1999 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரிகளான தமிழ்ச்சந்திரன், சோனல் மிஸ்ரா, அன்பு ஆகியோர் கூடுதல் டிஜிபி பதவி உயர்வும்,  2006 ஆண்டு பேட்ஜ் அதிகாரிகளான அபிஷேக் தீக்ஷித், மல்லிகா, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகியோருக்கு ஐஜிக்களாக பதவி உயர்வும் வழங்கப்பட உள்ளது. இதேபோல தேவாரணி, உமா, திருநாவுக்கரசு, மனோகர், வெண்மதி, மகேஷ்குமார் ஆகியோர் டிஐஜிக்களாக பதவி உயர்வு பெற உள்ளனர்.

இவர்களை தவிர நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வு பெற்று உதவி எஸ்.பி.க்களாக பணியாற்றுவோர் மற்றும் குரூப் 1 தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள், நேரடி எஸ்.ஐ.க்களாக பதவிபெற்று படிப்படியாக பதவி உயர்வு பெற்றவர்கள் என 17க்கும் மேற்பட்ட கூடுதல் எஸ்.பி.க்களுக்கும் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதில்  தற்போது தும்மி பதிவுகளில் இருக்கும் எஸ்.பி.க்கள் குறிப்பிட்ட மாவட்டங்களில் பதவியே கொடுத்தாலும் தேர்தல் வரை தங்களுக்கு இடமாறுதல் வேண்டாம் என டிஜிபியிடமே நேரடியாக கூறிவிட்டனராம். இதனால் குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று கூடுதல் எஸ்.பி.க்களாக பணியாற்றுவோருக்கு எஸ்.பி. பதவிகள் வழங்கப்பட உள்ளதாம். வழக்கமான கடும் போட்டிகள் இல்லாமல் பதவி உயர்வு வழங்கப்பட உள்ள நிலையில் கடந்த ஆண்டைப்போல டிசம்பர் 31-ம் தேதியே பதவி உயர்வு கிடைக்குமா அல்லது முதல் வாரத்தில் இந்த பதவி உயர்வு வழங்கப்படுமா என எதிர்பார்த்து  கொண்டுள்ளனர்.