தமிழ்நாடு முழுக்க அனைத்து பகுதிகளிலும், சமூக விரோத செயல்களையும், குற்றவாளிகளையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மக்கள் தொகையை கணக்கிடும் போது, காவல்துறையினரின் எண்ணிக்கை குறைவுதான். இருப்பினும் திறமையான நிர்வாகம், சரியான நேரத்தில் சரியான அணுகுமுறை ஆகியவற்றால், தமிழ்நாடு காவல்துறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்புடன் செயல்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் ஏழு எஸ்.பி.,க்கள் மற்றும் இரண்டு டி.ஜ.ஜி.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஓய்வு பெற்ற நிலையில் தமிழக காவல்துறையில் தற்போதைய நிலவரப்படி 31 எஸ்.பி. , பணி இடங்களும், டி.ஜ.ஜி.,க்கள் பணி இடங்களும் காலியாக இருக்கின்றன ., அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் காவல்துறை வட்டாரத்தில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. குறிப்பாக 1996 ஆம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளர் பணிகளில் சேர்ந்தவர்களில் 31 பேர் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக 2.5 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர். இதே போல குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று நேரடியாக டிஎஸ்பி ஆக 23 பேர் பணியமர்த்தப்பட்டனர். அவர்களும் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டனர். ஆக மொத்தம் காவல் கண்காணிப்பாளர் பணிகளுக்கு இந்த 54 பேரும் தகுதி பெற்ற நிலையில், தற்போது காலியாக உள்ள 31 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையில் இறங்கி இருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால்IPS, உள்துறை செயலர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி முதல் கட்டமாக 28 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவி உயர் வழங்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கோப்புகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே தயாராகி விட்டதாகவும் அறியப்படுகிறது. இந்த 28 பேருக்கும் எந்தெந்த மாவட்டங்களில் பொறுப்பு கொடுப்பது ஆகியவற்றை முடிவெடுக்க, முதல்வருடன் உள்துறை செயலாளர், டி ஜி பி உள்பட உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவி என்பது மிக மிக முக்கியமான ஒன்று. தான் சார்ந்த மாவட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் மட்டுமின்றி எம் எல் ஏ, எம் பி உள்பட அரசியல் தலைவர்களையும் அனுசரித்து அமைதியான முறையில் நிர்வாகத்தை நடத்த வேண்டும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு மாநில தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தங்களுக்கு சாதகமான தங்களை அனுசரித்துச் செல்லும் கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று, பல்வேறு நிலைகளில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்கி இருக்கும் இப்போதைய சூழலில், நேர்மையான, யாருக்கும் அஞ்சாத, துணிவு மிகுந்த எஸ்.பி. ,களை நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர், இது குறித்து டிஜிபி மற்றும் உளவுத்துறை ஜ.ஜி., சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி., அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
இப்போது பிரச்சனை என்னவென்றால், இப்போது 28 பேர் மட்டும் பணியமர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படி 28 பேர் மட்டும் பணியமத்தப்படும் பட்சத்தில், நேரடியாக டிஎஸ்பியாக பணியில் சேர்ந்த 23 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்ற 5 பேருக்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைக்கும். மற்ற 26 பேருக்கும் வாய்ப்பு கிடைக்காததால் சில ஆண்டுகளாவது காவல் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெறும் வாய்ப்பு நிறைவேறாத சூழ்நிலை உருவாகும்.
தற்போது மதுரை, காஞ்சிபுரம், சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையாளர் உள்பட பல இடங்களில் டிஐஜி அந்தஸ்துள்ள பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிக இடங்கள் காலியாக இருப்பதால் உடனடியாக முடிவுகள் எடுத்து, சரியான நபர்களை பணியமர்த்துவதில் காவல்துறை தலைமை சற்று திணறி வருவதாகவும், காவல்துறை வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு சீனியர் எஸ் பி பதவிகளில் இருக்கும் 11 பேருக்கு, டி ஐ ஜி பதவி உயர்வு ஆணைகள் வழங்க வேண்டும். இவர்களுக்கு முன்கூட்டியே வரும் ஆகஸ்ட் மாதமே பணி ஆணைகள் வழங்குவது குறித்து சங்கர் ஜிவால், முதல்வருடன் முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சரியான நேரத்தில் பதவி உயர்வும், இடமாற்றமும் அளிக்கப்படுகிறது. ஆனால் டி ஐ ஜி, எஸ் பி ஆகிய பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இவற்றை நிரப்புவதில் சுணக்கம் காட்டப்படுகிறது. காரணம், ஐஏஎஸ் படித்து பணியமர்த்தப்பட்டுள்ள உள்துறை செயலாளர், ஐபிஎஸ் அல்லாத உயர் அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் காட்டுவதாக குறை கூறப்பட்டுள்ளது. எனவே மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை தொடர்ந்து கட்டுக்கோப்பில் வைத்து, சிறப்பான நிர்வாகத்தை அளிப்பதற்கு காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்பதே, தமிழ்நாடு காவல்துறையினரின் கோரிக்கையாக உள்ளது