வேலூர் சரக டிஐஜி முனைவர் எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப., வேலூர் சரகம் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்திற்கு அருகிலுள்ள விளாப்பாக்கம் கிராமத்தில் உள்ள மகாலட்சுமி நர்சிங் கல்லூரியில் காவல்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகியோர் இணைந்து ‘இமைகள்’ திட்டத்தின் கீழ் நடத்திய கருத்தரங்கத்தில் இன்று (27.07.2023) சிறப்புரையாற்றினர். இதில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 183 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கத்திற்கு இராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ப.உஷா, தலைமை வகித்தார். இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. டி.வி.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி), திருமதி.R.பிரேமலதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஸ்வேசுவரய்யா, உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கிரிஷ் அசோக் யாதவ், இ.கா.ப. துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரபு, மற்றும் பள்ளி கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அவரது நினைவாக சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இக்கருத்தரங்கத்தில் சிறப்புரையாற்றிய காவல்துறை துணைத் தலைவர் முனைவர் எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது மற்றும் அதன் அவசியம் குறித்து உரையாற்றினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி குழந்தைகளின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் 2012ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (POCSO) குறித்தும் விரிவாக பேசினார்.
பள்ளிக்கு வரும் குழந்தைகளை கண்ணியமாக நடத்துவது குறித்தும், அவர்கள் மீது அன்பும் அக்கறையும் காட்ட வேண்டும் என்றும், ஆசிரியர்களின் ஊக்கமும் உற்சாகமும் சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் என்றும், பள்ளி மாணவர்களிடையே சாதி மத பேதமின்றி அனைவருக்கும் சமத்துவ உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை செயலாளர் திருமதி. சாந்தி பாலாஜி, தாளாளர் திருமதி.கோமதி பாலாஜி, இணை செயலாளர் செல்வி B.வைஷ்ணவி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.