சென்னை பெருநகர காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம், மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவு காவல் உதவி ஆணையாளர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரையிலான புலன் விசாரணை அதிகாரிகளுக்கு, மனித கடத்தல் குறித்தும், இவ்வழக்குகளில் எவ்வாறு புலன் விசாரணை மேற்கொள்வது குறித்தும் 1 நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, அவர்கள் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர் திரு.கபில்குமார் சி சரத்கர், இ.கா.ப, (தலைமையிடம்), திருமதி.கயல்விழி, இ.கா.ப., (தலைமையிடம்) ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், சென்னை பெருநகர காவல் நிலையங்களில் பணியாற்றும் 90 புலன் விசாரணை அதிகாரிகளுக்கு இன்று (07.10.2023) வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், மனித கடத்தல் குறித்தும் மற்றும் புலன் விசாரணை மேற்கொள்வது குறித்து 1 நாள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி வகுப்பில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு.P.M.நாயர், இ.கா.ப., அவர்கள் மனித கடத்தல் நேரடியாக, மறைமுகமாக, மற்றும் நூதன முறையில் நடைபெறுவது குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து சிறப்புரையாற்றினார். மேலும் வழக்கறிஞர் திருமதி.ரோசன்னா (IJM) அவர்கள் குழந்தைகளை கொத்தடிமைகளாக வேலை செய்யும் இடங்களில் பயன்படுத்துவது குறித்தும், அதனைத்தடுக்கும் சட்ட வழிமுறைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
மேலும், தமிழ்நாடு மனித கடத்தல் தடுப்பு பிரிவின் NGO திரு.ஹரிஹரன், குழந்தைகள் மற்றும் மனித கடத்தல் நடவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார். வழக்கறிஞர் திருமதி.பார்வதி, கொத்தடிமைத் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் இளஞ்சிறார் நீதிச்சட்டங்கள் குறித்து எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.வினோத்குமார், கடத்தல் சம்பவங்களில் இணையதளம் வழியாக சைபர் கிரைம் உதவியுடன் எதிரிகளை கண்டறிவது குறித்தும், அவர்களின் இருப்பிடம் நகர்தல் குறித்தும் கண்டறிந்து கடத்தப்பட்டவர்களை மீட்பது குறித்தும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த பயிற்சி முகாமில் மனித கடத்தல் குறித்தும், மீட்பது குறித்தும், இவ்வழக்குகளை புலன் விசாரணை செய்வது குறித்தும், சிறப்பு விருந்தினர்கள் மூலம் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிவு துணை ஆணையாளர் Dr.G.வனிதா, கூடுதல் துணை ஆணையாளர் திரு.M.அண்ணாதுரை, உதவி ஆணையாளர் திரு.சீனிவாசன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.