அருப்புக்கோட்டை நகர் பகுதியில் குற்ற செயல்கள் நடக்காமல் தடுக்கும் வகையிலும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக கண்காணிக்கும் வகையிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கண்காணிப்பு மையம் நகர் காவல் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக நகர் பகுதி முழுவதும் புதிதாக முதற்கட்டமாக 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது நாளடைவில் 200 என கேமராக்கள் என விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்நிலையில் நகர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்பு மையத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கும் கண்காட்சி நடைபெற்றது. இதில் காவல் நிலையத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் துப்பாக்கிகள், அபராதம் விதிக்கும் மிண்ணனு இயந்திரங்கள், குற்றங்களை கண்டுபிடிக்க பயன்படும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன மேலும் அவை எவ்வாறு செயல்படுகின்றன எப்போது பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து போலீசார் மாணவர்களுக்கு விளக்கி காவல்துறை எப்போதும் பொது மக்களின் நண்பனாக செயல்படும் என விளக்கினர். இந்த நிகழ்ச்சியில், டிஎஸ்பி ராஜாக்கனி, நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்வேல், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன், காரியாபட்டி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.