சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 24 வயதுக்குட்பட்ட முதன் முதலாக அற்ப வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் விதமாக, ஆலோசனைகள் மற்றும் தொழிற் பயிற்சிகள் அளித்து வாழ்வில் முன்னேற்றும் வழிகாட்டியாக செயல்பட ‘பறவை‘ (Personality Attitude Reformation Assistance Venture Affirming Identity) என்ற முன்னோடி திட்டம், கடந்த 28.03.2022 அன்று மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த பறவை திட்டத்தின் முக்கியமான நோக்கமானது, 24 வயதுக்குட்பட்ட முதல் தடவை குற்றம்புரிந்த இளம் குற்றவாளிகளுக்கு மனநல ஆலோசனை, குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை, மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு சிறப்பு ஆலோசனை மற்றும் சிகிச்சை, சட்ட உதவி, தொழில் வழிகாட்டுதல், அவர்களது திறமையை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப பயிற்சி வகுப்பு அளித்து தக்க வேலை வாய்ப்பு பெற உதவி செய்தல், வாழ்வை நலமாக்க சிறையிலேயே முறையான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கி சமுதாயத்தில் சரியான பாதையில் கொண்டு செல்ல அவர்களை நல்வழிபடுத்துவதாகும்.
இப்பறவை திட்டத்தின் மேற்பார்வை அதிகாரியாக, தெற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் நியமிக்கப்பட்டு அவரது மேற்பார்வையில், 30 காவல் சரகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு காவல் ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 30 காவல் ஆளிநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தின் மூலம் சென்னை பெருநகர காவல்துறையுடன் இணைந்து சிறைத்துறை, சமூக நல பாதுகாப்பு துறை, தமிழ்நாடு மாநில சட்ட உதவிக்குழு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, மனநல காப்பகம் ஆகிய அரசு துறைகளில் இதற்கென ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு, PRISM என்ற தன்னார்வ அமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று (15.11.2023) சென்னை பெருநகர காவல் ஆணையரகம் கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற பறவை திட்டம் பங்குதாரர்கள் ஆய்வு கூட்டத்தில் (Paravai Stakeholders review meeting) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் திரு.P.N.பிரகாஷ் அவர்களும் கலந்து கொண்டடார்.
பறவைகள் திட்டத்தின் கீழ் இதுவரை சைதாப்பேட்டை கிளைச்சிறையில் 418 இளங்குற்றவாளிகளும், மற்றும் கெல்லீஸ் கூர்நோக்கு இல்லத்தில் 116 இளஞ்சிறார்கள் கண்காணிப்பில் உள்ளனர்.
இதுவரை இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் காவலர்கள் மூலமாக மேற்படி 418 இளங்குற்றவாளிகளில் 244 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் மற்றும் 100 நபர்களுக்கு ஏற்கனவே படித்த கல்லூரியில் தொடர்ந்து படிக்கவும், மேலும் மேற்படி 116 இளஞ்சிறார்களில் 31 நபர்களுக்கு வேலை வாய்ப்பும், 24 நபர்களுக்கு ஏற்கனவே படித்த பள்ளியிலும், 07 நபர்களுக்கு ஏற்கனவே படித்த கல்லூரியில் தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்து அவர்கள் தொடர்ந்து படித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில், சென்னை பெருகர காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.கயல்விழி, இ.கா.ப, PRISM அமைப்பின் நிர்வாக அறங்காவலர் திரு.ரவிகுமார் பால், மாநில தொழில் நெறி வழிக்காட்டும் மையம் (SCGC) இயக்குநர் திருமதி.கலைவாணி, மனநல காப்பகம் (IMH) இயக்குநர் டாக்டர். மலையப்பன், உதவி பேராசிரியர் டாக்டர்.கார்த்திகேயன், தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு (TNLSA) திருமதி.தமிழ்செல்வி, தமிழ்நாடு சிறைத்துறை துணைத்தலைவர், திரு.முருகேசன், புனித தோமையர் மலை துணை ஆணையாளர் திரு.தீபக் சிவாச், இ.கா.ப, சமூகபாதுகாப்பு துறை இணை இயக்குநர் திரு.தனசேகர பாண்டியன், PRISM அமைப்பின் நிர்வாக அறங்காவலர் திரு.ரவிகுமார் பால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.