2023-2024ம் ஆண்டிற்கான சென்னை பெருநகர குற்றவியல் நீதித்துறை, அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் (22.12.2023) , எழும்பூர் காவல் அதிகாரிகள் நட்பகத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், நீதித்துறை சார்பில் கனம் சென்னை நகர சிவில் நீதிமன்ற முதன்மை நீதிபதி திருமதி.S.அல்லி மற்றும் கனம் சென்னை, எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நடுவர் திரு.N.கோதண்டராஜ் தலைமையில், எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற கூடுதல் முதன்மை நடுவர் திருமதி.R.கிரிஜா ராணி, எழும்பூர், ஜார்ஜ் டவுன், சைதாப்பேட்டை, கெல்லீஸ் சிறார் நீதிமன்றம், நடமாடும் நீதிமன்றம், விரைவு நீதிமன்றம் ஆகிய குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் என மொத்தம் 27 நீதிமன்ற நடுவர்கள், சென்னை பெருநகர காவல்துறை சார்பில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் தலைமையில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., (தெற்கு), திரு.அஸ்ரா கார்க், இ.கா.ப., (வடக்கு), திருமதி.P.K.செந்தில்குமாரி, இ.,கா.ப, (மத்திய குற்றப்பிரிவு), இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் என 55 காவல் அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் சார்பில், அரசு வழக்கறிஞர் துணை இயக்குநர் திரு.S.கண்ணன் தலைமையில், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், உதவி அரசு வழக்கறிஞர்கள் என மொத்தம் 20 அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
இக்கலந்தாய்வு கூட்டத்தில், நிலுவையில் உள்ள விசாரணை வழக்குகளை விரைந்து முடிக்கவும், நீண்ட நாட்கள் விசாரணை நடைபெற்று வரும் வழக்குகள் குறித்தும், அதனை விரைந்து முடிக்கவும் கலந்தாலோசிக்கப்பட உள்ளது. மேலும், வழக்கு விசாரணைகளின்போது, விசாரணை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய வழிக்ட்டு நெறிமுறைகள் குறித்தும், முதல் தகவல் அறிக்கைகளை நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படுவது குறித்தும், வழக்கு விசாரணைகளின்போது ஆஜராவது குறித்தும், சாட்சியங்களை ஆஜர்படுத்துவது குறித்தும், குற்றப்பத்திரிகைகளை விரைவாக தாக்கல் செய்து வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட உள்ளது.
மேலும், போக்சோ வழக்குகள் மற்றும் இளஞ்சிறார் வழக்குகளில், விசாரணை அதிகாரிகள் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தப்பட உள்ளனர். மேலும், நீதிமன்ற பிடியாணைகள், நீண்ட நாட்கள் நடைபெற்று வரும் வழக்குகளை விரைந்து முடிக்க, விசாரணை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்கவும், அதனை காவல் அதிகாரிகள் கண்காணிக்கவும் கலந்தாலோசனை செய்யப்பட உள்ளது.