மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பின் தொடர்ச்சியாக, இளைஞர்கள் மத்தியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை பெருநகர காவல்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து ‘முதலாவது சென்னை பெருநகர காவல் குதிரையேற்ற போட்டி 2024″ (First Greater Chennai Police Equestrian Championship-2024) 20.02.2024 முதல் 22.02.2024 வரை 3 நாட்கள் சென்னை, புதுப்பேட்டையில் நடைபெற்று வருகிறது.
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (20.02.2024) மாலை, புதுப்பேட்டை, சென்னை பெருநகர காவல் குதிரைப்படை வளாகத்தில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., முன்னிலையில், ‘முதலாவது சென்னை பெருநகர காவல் குதிரையேற்ற போட்டி 2024″)First Greater Chennai Police Equestrian Championship-2024) துவக்கி வைத்து, “குதிரையேற்ற பயிற்சி பள்ளியை” (Horse Riding School) திறந்து வைத்தார்.
இந்த குதிரையேற்ற போட்டியில் 4 Dressage போட்டிகளும், 9 Jumping போட்டிகளும் என மொத்தம் 13 போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும், காவல் துறை அணிகள் மற்றும் பொதுமக்கள் அணிகள் என 46 குதிரைகளுடன் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டி Youth மற்றும் Open என 2 பிரிவுகளில் நடத்தப்பட்டது.
மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருமதி.அமுதா, இ.ஆ.ப தமிழ்நாடு உள்துறை செயலாளர் அவர்கள், திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் முன்னிலையில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.