காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க பகல் மற்றும் இரவு ரோந்துகள் அதிகரிக்கப்பட்டும் ஆங்காங்கே வாகன சோதனையிலும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 31.03.2024 அன்று விடியற்காலை சுமார் 03.00 மணியளவில் விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட PSK தெரு, பாண்டுரங்கன் பெருமாள் கோயில் அருகே தலைமை காவலர் 1613 திரு.நித்தியானந்தம் என்பவர் TN 11 BF 6226 என்ற பதிவெண் கொண்ட ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் ஆட்டோவில் அமர்ந்திருந்த ஏகா (எ) ஏகாம்பரம் (48) த/பெ ஆறுமுகம், ஊரப்பாக்கம் சென்னை மற்றும் ஆட்டோ ஓட்டுநர் விக்னேஷ் த/பெ ரவி, வண்டலூர், செங்கல்பட்டு என்பவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் பணம் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர்களை விசாரணை செய்ததில் ஆனைக்கட்டி தெருவில் வசிக்கும் ஓய்வுபெற்ற தாசில்தார் ஸ்ரீனிவாசன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த சுமார் 11½ சவரன் தங்க நகைகள், 679 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ரூ. 2.10 லட்சம் ஆகியவற்றை திருடிவந்தது தெரியவந்தது. மேற்படி இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பொருட்கள் மீட்கப்பட்டன. குற்றவாளி ஏகா (எ) ஏகாம்பரம் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் குற்றவழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட வழக்கில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சம்மந்தப்பட்ட தலைமை காவலர் 1613 திரு. நித்தியானந்தம் என்பவரை காவல்துறை தலைமை இயக்குனர் / படைதலைவர் சங்கர் ஜிவால் இ.கா.ப., அவர்கள் தலைமையகம் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.