தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆகியோர் காவல் குறைதீர்ப்பு சிறப்பு முகாமில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 1016 மனுக்களைப் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

06.06.2024 முதல் 08.06.2024 வரை வேப்பேரி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில்நடைபெற்ற காவல் துறை சிறப்பு
குறைதீர் முகாமில், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப ஆகியோர் சென்னை காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களின்குறைகளை கேட்டறிந்து 1,016 புகார் மனுக்களை பெற்றனர்.தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர் அவர்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் / நகரங்களுக்கு இடமாற்றம் மற்றும் தண்டனைகள் தொடர்பான 248 மனுக்களை பெற்றுள்ளார். மாநிலத்தின் மாவட்டங்கள் / நகரங்களுக்கு இடமாற்றம் தொடர்பான மனுக்கள் மீது காத்திருப்போர் பட்டியலின் படி, தலைமை அலுவலகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், கருணை அடிப்படையில் சில மனுக்களும்பெறப்பட்டன. மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டபடி, காவலர்களுக்கெதிரான சிறிய அளவிலான தண்டனைப்பட்டியல்கள் கைவிடப்படுவது தொடர்பான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு
நடவடிக்கை எடுக்கப்படும். பெரும் தண்டனை தொடர்பான மனுக்கள் தற்போதுள்ள விதிகளின்படி காவல் துறை தலைமை அலுவலகத்தில் விரைவாக பரிசீலிக்கப்படும். ஊதிய முரண்பாடு குறித்து பெறப்பட்ட மனுக்கள் மீதும் தலைமை அலுவலகம் மூலம் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
காவலர் குறை தீர் சிறப்பு முகாமில் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் திரு.கபில்குமார் சி சரட்கர், இ.கா.ப. கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்), திருமதி.A.கயல்விழி இ.கா.ப. காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) & திரு.K.அதிவீரபாண்டியன் காவல் துணை ஆணையாளர். (நிர்வாகம்) மற்றும் காவல்துறை உதவி தலைவர்கள் Dr.N.ஸ்ரீநாதா, இ.கா.ப. (ச&ஒ), திரு.பா.பாலாஜி, (நலன்) ஆகிய காவல் அதிகாரிகள் அடங்கிய காவல் குழுவினர் கலந்து கொண்டனர்.

சென்னை, ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கிடையே இடமாற்றம் கோரிய மீதமுள்ள மனுக்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களால் ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையர்களுடன் வரும் வாரத்தில் நடத்தப்பட உள்ள (Inter City Transfer Committee) கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.