போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து விற்பனை செய்து வந்த மூன்று பேர் கைது….
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 800 போதை மாத்திரைகள் பறிமுதல்..
தேனி மாவட்டம் -ஆண்டிப்பட்டி அருகே உள்ள மணியாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மலைச்சாமி(26).இவருடைய மனைவி பவதாரிணி(20). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
மலைச்சாமி தனது குடும்பத்துடன் தற்போது திருப்பூர் மாவட்டம்-இடுவாய் ஊராட்சி -பாரதிபுரம் அருகே உள்ள தாந்தோணிஅம்மன் நகர் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்
இந்த நிலையில் இடுவாய் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மலைச்சாமி போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதைத்தொடர்ந்து மலைச்சாமியின் வீட்டில் நேற்று பல்லடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தியதில் 800 போதை மாத்திரைகளை கைப்பற்றினர்.
பின்னர் இதைத்தொடர்ந்து மலைச்சாமியை கைது செய்த போலீசார் போதை மாத்திரைகளை விற்பனை செய்வது தொடர்பாக யார் யாருக்கு தொடர்பு உள்ளது எனவும் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இடுவம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் வசித்து வரும் தினேஷ்குமார், அதே பகுதியில் வசித்து வரும் கௌதம் (24) ஆகியோர் மலைச்சாமி உடன் சேர்ந்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்த நிலையில் இருவரையும் மங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் Tapentadol (டேபன்டனால்) எனப்படும் வலி நிவாரணி மாத்திரையை ஆன்லைனில் பத்து மாத்திரைகள் 360 என்ற விலைக்கு வாங்கி அதை 3000 ரூபாய் வரை அப்பகுதியில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இந்த மாத்திரையை பொடியாக தண்ணீரில் கலந்து சிரஞ்ச் மூலம் நரம்பில் செலுத்தினால் நான்கு மணி நேரத்திற்கு போதை ஏற்படும். இப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இந்த மாத்திரைகளை மூன்று பேரும் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த மங்களம் காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
வலி நிவாரணி மாத்திரைகளை போதைப் பொருளாக மாற்றி விற்பனை செய்து வந்த நிலையில் 800 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பல்லடத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது…