திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உயர் அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
முன்னதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறையின் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் காவலர்கள் அவசர காலங்களில் பணிக்கு செல்லும் வாகனங்கள், உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள், நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.
பின்பு மாவட்டத்தில் கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் உள்ள சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்த எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது போன்ற செயல்களில் ஈடுபட்ட காவல் ஆளிநர்கள் மற்றும் அரசு வழக்குரைஞர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உட்பட மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 45 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) பாலச்சந்திரன் அவர்கள், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்கள் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், அரசு வழக்குரைஞர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.