தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே காடுவெட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக 30 நாட்டு வெடிகுண்டுகளை பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்து உள்ளனர் .இந்நிலையில், ஆகஸ்ட் 25 ம் தேதி இரவு அந்தப் பகுதியில் அதிக சத்தத்துடன் வளர்ப்பு நாயின் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு கிராம காவல் கமிட்டியாளர்கள் அந்தப் பகுதியில் சுற்றிப் பார்த்தபோது வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டு ஒன்றை வளர்ப்பு நாய் கடித்ததில் நாட்டுவெடி வெடித்து வளர்ப்பு நாயின் தலை சிதறி கிடந்துள்ளது . இதனையடுத்து, அந்தப் பகுதியில் கிராம காவல் கமிட்டியாளர்கள் சுற்றிப் பார்த்தபோது அந்தப் பகுதியில் இருந்து இருவர் தப்பி ஓடியுள்ளனர் . அதில், ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் பிடிபட்டவர் எ.வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (30)என்பதும் தப்பி ஓடியவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (36) என்பதை தெரிந்து கொண்டு கிராம காவல் கமிட்டியாளர்கள் இரவு முழுவதும் காவல் கமிட்டி சங்க கட்டிடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு மறுநாள் ஆகஸ்ட் 26 ம் தேதி காலை பெரியகுளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .
பெரியகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிவக்குமார் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைத்திருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார் .மேலும், இதுகுறித்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் ஞானபண்டிதநேரு தலைமையிலான குழுவினர் வெடித்த நாட்டு வெடிகுண்டு மற்றும் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 29 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.
மேலும், பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு ஜெயராணி , சார்பு ஆய்வாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் பிடிபட்ட சிவக்குமார் என்பவரை பெரியகுளம் காவல் நிலையம் அழைத்துச் சென்று நாட்டு வெடிகுண்டுகள் உங்களுக்கு எவ்வாறு கிடைத்தது , இதை வைத்து வேறு ஏதேனும் சதி வேலை செய்ய முயற்சிகள் செய்தனவா இல்லை இதற்குப் பின்னால், வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்ற கோணத்தில் பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பி ஓடிய ஆனந்தராஜ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர் . விசாரணையின் முடிவில், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மட்டுமே நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்ததை சிவக்குமார் ஒப்புக்கொண்டதன் பேரில் பெரியகுளம் காவல்துறையினர் தப்பி ஓடி தலை மறைவாக உள்ள ஆனந்தராஜ் என்பவரை தீவிரமாக தேடிவரும் நிலையில், சிவக்குமார் என்பவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் .
கைப்பற்றப்பட்டுள்ள நாட்டு வெடிகுண்டுகளை நீதிமன்றத்தில் காண்பித்து விட்டு அதனை செயலிழக்க வைக்க உள்ளதாக பெரியகுளம் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர் . பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாள்தோறும் பல்வேறு விதமான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் சென்று வரக்கூடிய விவசாய பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை பதித்து வைத்து வளர்ப்பு நாய் தலை சிதறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரிதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .
மேலும் இதில் தலைமறைவாக உள்ள ஆனந்தராஜ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில், இதில் வேறு யாரும் உள்ளனரா அவ்வாறு இருப்பின் இதில் சம்பந்தப்பட்ட அனைவரது மீதும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெரியகுளம் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர் . கிராம காவல் கமிட்டியாளர்கள் இரவு முழுவதும் நாட்டு வெடிகுண்டு வைத்தவரை பிடித்து வைத்தது குறித்தும் இரவே காவல்துறையினரிடம் ஒப்படைக்காமல் வைத்திருந்தது குறித்தும் பெரியகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.