சென்னை பெருநகர காவல்துறையின் சமூகப் பொறுப்புணர்வை எடுத்துக்காட்டும் விதமாக, காவல் ஆணையாளர் ஆ. அருண், இ.கா.ப. அவர்கள், 12ம் வகுப்பில் சிறப்பான கல்வி சாதனை செய்த காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு தமிழக அரசின் 2023-2024 முதலாம் கல்வி ஆண்டிற்கான சிறப்பு கல்வி உதவி தொகை (Special Scholarship 2023-2024) வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சி இன்று (19.11.2024) மாலை வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில், 12ம் வகுப்பில் உயர்ந்த மதிப்பெண் பெற்ற சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 19 காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு, மொத்தம் ரூ. 4,87,566 மதிப்பிலான உதவி தொகை வழங்கப்பட்டது. காவல் ஆணையாளர் அவர்கள், ஒவ்வொருவருக்கும் உதவி தொகையை நேரில் வழங்கி, அவர்களது கல்வி சாதனைகளை பாராட்டி, மேலும் உயர்ந்த சிகரங்களை அடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி:
விழாவில், சென்னை பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) கபில்குமார் சி சரட்கர், இ.கா.ப., A. கயல்விழி, இ.கா.ப., மற்றும் துணை ஆணையாளர்S. மெஹலினா ஐடன் ஆகிய முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டு நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தனர்.
இந்த நிகழ்வு, காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் கல்விக்கான ஊக்கத்தையும் செம்மையையும் வளர்க்கும் உன்னத முயற்சியாக திகழ்கிறது. தமிழக அரசின் ஆதரவும், சென்னை காவல்துறையின் சமூகச் செயற்பாடுகளும் கல்வி வளர்ச்சிக்கு பலனளிக்கின்றன என்பதை இந்த நிகழ்வு வலியுறுத்துகிறது.