விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில், காலநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கங்களை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் வனத்துறை சார்பில் நடைபெற்றன.

விவசாயிகளுக்கான பயிற்சி:
ராஜபாளையம் வனத்துறை சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில், வனச் சரக அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார். சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி கோபிநாத், நிலையான விவசாய முறைகளின் அவசியம் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதற்கான வழிமுறைகளை விளக்கினார். விவசாய உற்பத்தி உயர்த்தி, சுற்றுச்சூழலுக்கு எதிரான விளைவுகளை தடுக்க முடியும் என கூறினார். நிகழ்வில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

செய்தியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி:
ஸ்ரீவில்லிபுத்தூரில் மேகமலை புலிகள் காப்பகத்தில், செய்தியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை நடைபெற்றது. துணை இயக்குநர் தேவராஜன் தலைமையில், வன உயிரின ஆராய்ச்சியாளர் நாராயணி சுப்பிரமணியன் காலநிலை மாற்றம் தொடர்பான செய்திகளை சரியான முறையில் வழங்குவது குறித்து விளக்கமளித்தார். படவிளக்கங்களுடன் கூடிய விளக்க உரை வழங்கி, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இவ்விழாவில் வனத்துறை அலுவலர்கள் மற்றும் விருதுநகர் மாவட்டம் முழுவதிலுமிருந்த பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.