திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கூனியூர் பஸ் டிப்போவில் செக்யூரிட்டி அதிகாரியாக பணிபுரியும் சுத்தமல்லி, பாப்பான்குளத்தைச் சேர்ந்த முருகேசன் (41), தனது நேர்மையான செயலால் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

2025 பிப்ரவரி 24ஆம் தேதி, டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றை சோதனை செய்தபோது, ஒரு பையில் ரூ.60,000/- பணமும் செல்போனும் கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. உடனே உரிய நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உணர்வுடன், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் நேரடியாக வந்து அவற்றை ஒப்படைத்தார்.

இது குறித்த தகவல் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் அவர்களுக்கு தெரிய வந்ததும், முருகேசனை நேரில் அழைத்து, அவருடைய நேர்மையைப் பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து, பாராட்டு சான்றிதழும், வெகுமதியும் வழங்கி கௌரவித்தார்.

மக்களுக்கு ஒப்புமையில்லாத நேர்மையின் எடுத்துக்காட்டாக விளங்கிய முருகேசனின் செயல், சமூகத்தில் நல்லதோர் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.