செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒத்திவாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி வளாகத்தில், 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி 2024-2025 மார்ச் 17 முதல் 22 வரை நடைபெறுகிறது. இது தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.
போட்டியின் பிரம்மாண்ட தொடக்கவிழா, ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் கவாத்து மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர்/படைத்தலைவர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் விழாவுக்கு தலைமை வகித்து துவக்கி வைத்தார்.




போட்டியின் ஏற்பாட்டு செயலாளர் மற்றும் காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு. தினகரன், இ.கா.ப. அவர்கள், தலைமை விருந்தினரை வரவேற்று, போட்டியின் ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள், நடுவர் குழுவினர்கள், மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலங்கார அணிவகுப்புக்காப்பு மற்றும் கவாத்து மரியாதையை ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு காவல்துறையின் அர்ப்பணிப்பை போற்றும் வகையில், மாண்புமிகு குடியரசு தலைவரின் நிஷான் வண்ணக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
கூடுதல் இயக்குநர் திரு. தினகரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றியபோது, தலைமை விருந்தினர் திரு. சங்கர் ஜிவால், துப்பாக்கி சுடுதல் போட்டியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். துப்பாக்கி சுடுதல் போட்டிகள், காவல்துறையினரின் துல்லியக் கண், மனக்கட்டுப்பாடு மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறனை மேம்படுத்துவதில் பெரிதும் உதவுகின்றன என்று அவர் கூறினார்.
பின்னர், அகில இந்திய காவல் கட்டுப்பாட்டு வாரிய கொடியை ஏற்றி, 25வது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டியின் அதிகாரப்பூர்வ துவக்கத்தை அறிவித்தார். பங்கேற்கும் அணிகளின் கொடிகள் ஏற்றப்பட்டு, சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
நிகழ்வின் இறுதியில், தலைமை விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இவ்வாறு, 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது.