திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்த காவலர்கள், மற்றும் பொது இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க நகையை நேர்மையுடன் ஒப்படைத்த நபரின் செயலை பாராட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வ நாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் இன்று (22.04.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நற்சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
முதலாவது சம்பவம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாறை மாரியம்மன் கோவில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது. கலிங்கப்பட்டி நடுப்பட்டியைச் சேர்ந்த பெரியம்மாள் (வயது 70) என்பவரிடம் 2 1/2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தேவி (வயது 43) மற்றும் ஆர்த்தி (வயது 39) ஆகிய இரு பெண்கள், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடிக்கப்பட்டு, மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சிறப்பான செயலை கண்காணிப்பாளர் பாராட்டினார்.






இரண்டாவது சம்பவமாக, ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு பகுதியில் வாகன தனிக்கையின் போது கஞ்சா எடுத்துச் சென்ற இருவரை, நெடுஞ்சாலை ரோந்து பிரிவை சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்ரமணியன், முதல் நிலை காவலர் கார்த்திக், காவலர் ஜெகதீஸ் மற்றும் மண்ணச்சநல்லூர் காவல் நிலைய தலைமை காவலர் சதீஸ்குமார் ஆகியோர் தடுத்துப் பிடித்து, அவர்களிடம் இருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இவர்களது விழிப்புணர்வும், துணிச்சலுமாக செயல்பட்டது குறித்து சிறப்பு பாராட்டு அளிக்கப்பட்டது.
மூன்றாவது நிகழ்வாக, சமயபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே கேட்பாரற்ற நிலையில் கீழே கிடந்த 2 பவுன் தங்கச் செயினை சமயபுரம் போக்குவரத்து காவலர் சிவக்குமார் மற்றும் வெங்கங்குடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான முருகானந்தம் என்பவர் எடுத்து, சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களின் நேர்மையான செயலுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுகள் மூலமாக, காவல்துறையின் வேகமான செயலாற்றலும், பொது மக்களின் சமூகப் பொறுப்புணர்வும் முக்கியத்துவம் பெறுகின்றன என்பது தெளிவாகிறது.