ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிலர், பங்கு வர்த்தகம் மற்றும் ஆன்லைன் பகுதிநேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் பணத்தை முதலீடு செய்து மோசடிக்குள்ளானார்கள். இவர்கள் ஆவடி காவல் ஆணையாளர் கி. சங்கர், இ.கா.ப., அவர்களிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வழக்குகள் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள், இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலிலும், இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் திரு. அர்னால்ட் ஈஸ்டர் அவர்களின் மேற்பார்வையிலும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் செயல்பட்டு, மோசடியாளர்களின் வங்கிக் கணக்குகளை அடையாளம் காண்டு, அவை முடக்கப்பட்டன. இதில் இருந்து இழந்த பணத்தை மீட்டுத் திருப்பி வழங்கும் பணியும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டது.

24.05.2025 முதல் 17.06.2025 வரை 17 பேரிடம் ரூ.55,65,639/- தொகை மீட்கப்பட்டு, நீதிமன்றத்தின் அனுமதியுடன் அதே நபர்களுக்கே மீண்டும் வழங்கப்பட்டது. இந்த வழக்குகளில் தொடர்புடைய 13 பேர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட ரவிந்தர் பரீக் – ரூ.15,70,000, அரவிந்த் – ரூ.10,00,000, மகேஷ்வரன் – ரூ.8,94,110, கோகிலா நாகராஜன் – ரூ.2,85,000, சங்கமேஷ் – ரூ.1,19,492 ஆகியோர், இழந்த பணத்தை மீட்டுப் பெற்றதற்கான சான்றிதழ்களைக் (Remittance Certificate) ஆவடி காவல் ஆணையாளர் அவர்களிடம் நேரில் பெற்றுக்கொண்டு, தனது நன்றியை தெரிவித்துச் சென்றனர்.

பொதுமக்களின் நலனுக்காக ஆவடி காவல் துறை எடுத்த நடவடிக்கை பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.