தேனி மாவட்டம், தேனி வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., (18.06.2025) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தொடங்கிய இந்த திட்டத்தின் நோக்கம், அரசு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் தாமதமின்றி மக்களைச் சென்றடையச் செய்வதுடன், மக்களிடையே நேரடியாக சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வு காண்பதாகும். இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் அனைத்து துறை அலுவலர்களுடனும் இணைந்து ஆய்வு நடைபெறுகிறது.

நேற்றைய நிகழ்வில், தேனி வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். இதில், துறை அலுவலர்கள் தங்களுக்குட்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, விரைவில் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, இரவு 8.30 மணியளவில் தேனி நகர காவல் நிலையத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. “எனது வீட்டில் திருட்டு நடந்தால், அதை காவல்துறை எவ்வாறு கையாளும்?” என கேள்வி எழுப்பிய ஆட்சியருக்கு, ஆய்வாளர் ராமலட்சுமி, சார்பு ஆய்வாளர் இளங்குமரன் மற்றும் போலீசார் விரிவாக விளக்கமளித்தனர்.
காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள், கழிப்பிடங்கள், பொதுமக்கள் பயன்பாட்டு வசதிகள், பரிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, அவற்றை ஒழுங்காக பராமரிக்க வேண்டும் என்றும், காவல் நிலையம் வருகிற பொதுமக்களிடம் மரியாதையுடனும் கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, தேனி வட்டாட்சியர் சதீஸ், வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.