கடந்த இரண்டு வருடங்களாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி ரஷீத் ஷேக் என்பவரை தனிப்படை போலீசார் ஜார்கண்டில் வைத்து 16.07.2024-ந் தேதி கைது செய்தனர்.கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ந் தேதி நாவலூர் நயாரா பெட்ரோல் பங்க் அருகில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சங்கரதாஸ் என்ற கட்டிட தொழிலாளியை முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்து விட்டு கொலையாளி ரஷீத் ஷேக் என்பவர் தனது சொந்த ஊரான ஜார்கண்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். மேற்படி கொலை சம்மந்தமாக தாழம்பூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேற்படி கொலை குற்றவாளியை பிடிக்க கடந்த இரண்டு ஆண்டு காலமாக தனிப்படையினர் இரண்டு முறை எதிரியை பிடிப்பதற்கு சென்றும் பிடிக்க இயலவில்லை.

போலீசார் இரண்டு முறை ஜார்கண்ட் சென்றபோது எதிரியின் ஊரில் வசிப்பவர்கள், நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தார் விபரங்கள் சேகரித்து வந்தனர். எதிரி சம்பந்தப்பட்ட செல்போன் விபரங்கள் மற்றும் நடவடிக்கைகளை கண்காணித்த போது எதிரியின் இருப்பிடம் சமீப காலமாக ஜார்கண்ட் மாநிலம் சகேப் கஞ்ச் மாவட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவல் துணை ஆணையாளர் கௌதம் கோயல், இ.கா.ப. பள்ளிக்கரணை அவர்களின் உத்தரவுபடி கேளம்பாக்கம் சரக காவல் உதவி ஆணையாளர்வி.வெங்கடேசன் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் உதவி ஆய்வாளர் சுமன், தலைமை காவரலர் காசிமுருகன் மற்றும் காவலர்கள் முரளி மனோகர் ஜோசி, முஸ்தாக் ஷேக் அஹமது ஆகியோர்கள் ஜார்கண்ட் மாநிலம் பர்கர்வா என்ற இடத்திற்கு சென்றனர். காவலர் அஹமத் இந்தி மொழி பெயர்ப்பு வேலையை பார்த்துக்கொண்டார். ஜார்கண்ட் மாநில லோக்கல் போலீசார் உதவியுடன் எதிரியின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததில் எதிரி பங்களாதேஷில் வியாபாரம் செய்வதாகவும் எப்போதாவது ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்வதாகவும் தெரியவந்தது. மேலும் ஒரிரு நாளில் குடும்பத்தில் நடக்கவுள்ள ஒரு விஷேசத்தில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிந்து போலீசார் எதிரி ரஷிதீன் வருகைக்காக காத்திருந்து எதிர்பார்த்தப்படியே எதிரி அந்த விஷேசத்திற்கு வந்தபோது தனிப்படை போலீசார் எதிரியை கைது செய்து ஜார்கண்ட் மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாட்களுக்கு போக்குவரத்து வாரண்ட் வாங்கி சென்னை அழைத்து வரப்பட்டு19.07.2024 அன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

வங்கதேச எல்லை அருகில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக சென்று இரண்டு வருடங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை கைது செய்து வந்த தனிப்படையினரை தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோதக், இ.கா.ப. அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.