ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபிராமம் பகுதியில் முனீஸ்வரன் மற்றும் மைதீன் நைனார் ஆகியோர்களுக்கு சொந்தமான பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில், சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் முதல் நிலை காவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, முறையற்ற விதத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக உறுதி செய்யப்பட்டதால், இரண்டு கடைகளிலும் சுற்றிவளைத்து உரிமையாளர்களை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் முனீஸ்வரன் மற்றும் மைதீன் நைனார் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

🔹 முனீஸ்வரன் – முதல் முறையாக குற்றம் செய்த காரணத்தால் ₹25,000 அபராதம்
🔹 மைதீன் நைனார் – இரண்டாவது முறையாக குற்றம் செய்த காரணத்தால் ₹50,000 அபராதம்
மேலும், அதிகாரிகள் இரண்டு கடைகளிலும் சீல் வைத்தனர். இதனால், அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
அரசு எச்சரிக்கை:
தமிழ்நாடு அரசு புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு முழுமையான தடைவிதித்துள்ளது. எனவே, இது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், மாவட்ட மக்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் தெரிந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.