பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடந்து வந்த இருசக்கர வாகன திருட்டுகளை சிறப்பாகக் கண்டறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு, நான்கு நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் ₹15 லட்சம் மதிப்பிலான 18 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
விசாரணை நடவடிக்கை:
தொடர் திருட்டுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆதர்ஷ் பசேரா இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில், மங்களமேடு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. M. தனசேகரன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மங்களமேடு காவல் ஆய்வாளர் திரு. பாலாஜி மற்றும் பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சரவணன் ஆகியோர் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பல்வேறு கோணங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் மூலம் குற்றவாளிகள் கண்டறியப்பட்டனர்.


கைது செய்யப்பட்டவர்கள்:
- முகமது இப்ராஹிம் (22) – உமர்கித்தா, சிவன் கோவில் தெரு, அத்தியூர்.
- சூரியா (26) – கபிரிஏல், செட்டியார் தெரு, ஆடுதுறை.
- சுரேஷ் (25) – பெருமாள், சின்னப்பட்டி, ஓமலூர், சேலம் மாவட்டம்.
- ரகுமான் (28) – ராஜா முஹம்மது, மதீனா பள்ளி தெரு, கீழக்குடிகாடு.
இவர்கள் திருடிய இருசக்கர வாகனங்களை குறைந்த விலையில் விற்று வந்ததையும் விசாரணை மூலம் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
திருட்டு நடவடிக்கையின் பரப்பு:
கைது செய்யப்பட்ட இவர்கள், பெரம்பலூர் மாவட்டத்தை மட்டுமின்றி அரியலூர், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் திருட்டு செயல்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்:
இதுவரை இந்த நபர்கள் திருடிய 18 இருசக்கர வாகனங்கள் (பெரம்பலூர் – 9, பிற மாவட்டங்கள் – 9) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகன உரிமையாளர்களிடம் அவற்றை திருப்பி ஒப்படைக்க உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காவல்துறையின் உறுதி:
“என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக” எனும் உறுதிப்படிதோடு, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை இந்த குற்றச்செயல்களை விரைவாகக் கண்டறிந்து சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளது.
– பெரம்பலூர் மாவட்ட காவல்துறை