வாணியம்பாடி, மே. 4- திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் போலீஸார் மற்றும் பொது மக்களிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியில்‌ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி மேற்பார்வையில் வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் பழனி ஏற்பாட்டில் நடைபெற்ற கைப்பந்து போட்டி நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். கிராமிய காவல் ஆய்வாளர் பழனி அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கலந்துக் கொண்டு வீரர்களை அறிமுகம் செய்து வைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டியில் பல்வேறு பகுதியில்
இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

இறுதியாக போட்டி முடிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்
பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர்

பூசாராணி, பேரூராட்சி திமுக செயலாளரும், மன்ற உறுப்பினருமான செல்வராஜ் மற்றும்
ஊர் பொது மக்கள் மற்றும் காவல்துறையினர் கலந்துக் கொண்டனர்.

மேலும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழித்திடும் நோக்கத்தோடு மதுவிலக்கு வேட்டை நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து 03.05.2024 மாவட்டம் முழுதும் 16 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 20 காவலர்கள் கொண்ட தனிப்படை தனித்தனியாக அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் நடத்திய மதுவிலக்கு வேட்டையில் மொத்தம் 31 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில் பொது இடத்தில் மது அருந்தியதாக 18 வழக்குகளும், மது பாட்டில்கள் கடத்தியதாக 03 வழக்குகளும், கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக 10 வழக்குகளும் பதியப்பட்டு அதில் 37 அரசு மது பாட்டில்களும் ஒரு இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு 07 நபர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் எனவும்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.