அரசு வேலை வாங்கித் தருவதாக 36,20,000/- பணம் மோசடி செய்து, போலி பணி நியமன ஆணைகள் வழங்கிய கணவன்-மனைவி கைது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், கண்டமங்கலம் குமிளங்காட்டு தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன்(43). தனது மனைவி வழி உறவினர்களான அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் விழபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (42),மற்றும் அவரது மனைவி மதியழகி(35) ஆகியோர் தனது வீட்டிற்கு வந்ததாகவும், மதியழகி அரியலூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் வேலை பார்ப்பதாகவும், பிரகாஷ் அரியலூர் அரசு சிமெண்ட் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறினர்.நீங்கள் படித்துவிட்டு ஏன் சும்மா இருக்கிறீர்கள் பணம் கொடுத்தால் உங்களுக்கு BSNL நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அவர்களிடம் வங்கி பரிவர்த்தனை மூலமாக 4,90,000/- ரூபாயும், ரொக்கமாக 4,00,000/-ரூபாயும் பெற்றுக்கொண்டார்.

பின்னர் பிரகாஷ் உங்கள் ஊரில் யாராவது படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்தால் அழைத்து வாருங்கள் அவர்களுக்கும் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறினர். இதனை நம்பி அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார், முருகன்,ரகுபதி,சண்முகசுந்தரம்,கவிமணி, கதிரவன் மற்றும் இருகையூரைச் சேர்ந்த குருதேவன் ஆகியோரை பிரகாஷிடம் அறிமுகம் செய்து வைத்தார். இவர்களிடம் அரசு சிமெண்ட் நிறுவனம், சேலம் ஆவின் நிறுவனம், ஆட்சியர் அலுவலகம் மற்றும் அஞ்சல் துறை போன்ற இடங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி 27,10,000/-ரூபாய் பணத்தினை பெற்றுக் கொண்டார்கள். பின்னர் தனக்கும்,கவிமணி என்பவருக்கும் அஞ்சல்துறை பணி நியமன ஆணை வழங்கினர். இதுகுறித்து அஞ்சல் துறையில் விசாரித்தபோது பணி நியமன ஆணை போலியானது என்று தெரியவந்தது. இது தொடர்பாக பிரகாஷிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். எனவே எங்களுக்கு வேலை வாங்கி கொடு, இல்லையென்றால் எங்கள் பணத்தை திருப்பி கொடு என்று கேட்டபோது பிரகாஷ் உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும், இது பற்றி வெளியில் ஏதாவது புகார் கொடுத்தால் உங்களை வெட்டி காலி செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இது குறித்து பிரபாகரன் 29.09.2022 அன்று அளித்த புகாரின் அடிப்படையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் துரிதமான விசாரணைக்கு பின் எதிரிகள் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி மதியழகி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணமதி,உதவி ஆய்வாளர்கள் ரவி,திரு.முருகன் மற்றும் காவலர்கள் 13.09.2023 அன்று எதிரி பிரகாஷினை ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகேயும்,அவரது மனைவி மதியழகியை அரியலூர் ராஜீவ்நகர் பேருந்து நிறுத்தத்தில் வைத்தும், கைது செய்தனர். இவர்களிடமிருந்து செல்போன் இரண்டு, சுமார் 60 கிராம் தங்க நகைகள், ரூபாய் 56,070/-ரொக்கம், மூன்று ஏடிஎம் கார்டுகள், மற்றும் போலி பணி நியமன ஆணை கடிதம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.