ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் கடந்த பிப்ரவரி 10 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற 68வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு (Police Photography & Videography) பிரிவில் தமிழக காவல் துறையை பிரதிநிதித்துவப்படுத்தி மதுரை மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலர் ராஜா வெற்றிக்கோப்பை (Winner Trophy) வென்று மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் ராஜா, புகைப்பட மற்றும் ஒளிப்பதிவில் தனது திறமையை வெளிப்படுத்தி, பல்வேறு மாநிலங்களின் காவல்துறை போட்டியாளர்களுக்கு இடையே சிறந்து விளங்கி முதலிடம் பிடித்து தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்த புகழ்பெற்ற சாதனைக்காக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த், இ.கா.ப., அவர்கள் திரு. ராஜாவை பாராட்டி, அவரின் திறமையைப் பெருமைப்படுத்தி, மேலும் பல்வேறு உயரிய சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்த வெற்றிக்கோப்பை மூலம் தமிழக காவல் துறையின் திறமைகளை தேசிய அளவில் நிரூபிக்கும் வகையில் ராஜா முத்திரை பதித்துள்ளார். அவரது சாதனை, காவல் துறையின் படைப்பாற்றலையும், தொழில்நுட்ப அறிவையும் உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது.