சென்னை: கடந்த 30.03.2025 அன்று காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் கப்பல் மூலம் வந்த கன்டெய்னரில் இருந்து சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான, மொத்தம் 922 கிலோ எடையுள்ள 30 வெள்ளி பார்கட்டிகள் மர்மமாக களவாகியது. இதுகுறித்து BRINKS INDIA Pvt Ltd நிறுவனத்தின் மேலாளர், 05.04.2025 அன்று E4 காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், ஆவடி காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில், 3 காவல் உதவி ஆணையாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் பின்னர், குற்றத்தில் ஈடுபட்ட 12 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து களவுபோன வெள்ளி பார்கள் முழுமையாக மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலுக்கு ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு, குறுகிய காலத்தில் முழுமையான வெள்ளி பார்களை மீட்டதில் முக்கியப் பங்காற்றிய 3 காவல் உதவி ஆணையாளர்கள், 3 காவல் ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு நிலை காவல் ஆளிநர்கள் ஆகியோரை ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் இன்று (22.04.2025) நேரில் அழைத்து பாராட்டியதுடன், வெகுமதிகள் வழங்கி கவுரவித்தார்.