ஆவடி காவல் ஆணையரகம் சார்பில், இணையதள குற்றங்கள் மற்றும் மோசடிகள் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருமுல்லைவாயல் SM நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, காவல் ஆணையாளர் திரு. கி. சங்கர், இ.கா.ப. அவர்கள் தலைமையேற்றார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 21 கல்லூரிகளைச் சேர்ந்த 420 மாணவர்கள் பங்கேற்றனர். டிஜிட்டல் கைது, ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி, பண மோசடி, இணையதள மூலம் அசைவார்த்தைகள் கூறி ஏமாற்றுதல் உள்ளிட்ட முக்கிய இணையதள குற்றங்கள் குறித்து காவல் ஆணையாளர் மாணவர்களிடம் விளக்கமளித்தார்.


மேலும், ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட இணையவழி குற்றப்பிரிவு போலீசார், மாணவர்களுக்கு இணையதள குற்றங்கள் மற்றும் அதன் வகைகள் குறித்து விரிவாக விளக்கினர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பரப்புதல்:
விழிப்புணர்வை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், 07.02.2025 முதல் 12.02.2025 வரை, ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும், மாணவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் (வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொது இடங்கள்) இணையதள குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர் திருமதி. பவானீஸ்வரி, இ.கா.ப., மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் திரு. பெருமாள், இ.கா.ப., இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் திரு. அர்னால்ட் ஈஸ்டர், மற்றும் பல்வேறு காவல் நிலைய ஆய்வாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சி, இணையதள மோசடிகளைத் தடுக்கும் வகையில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய முயற்சியாக அமைகிறது.