ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சில பொதுமக்கள், ஆன்லைன் பங்கு வர்த்தகம் மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு எனும் பெயரில் மோசடிக்குள்ளாகி, பெரிதும் பணத்தை இழந்தனர். இது தொடர்பான புகார்களை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர், இ.கா.ப. அவர்களிடம் அளித்ததையடுத்து, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் அர்னால்ட் ஈஸ்டர் அவர்களின் நேரடி மேற்பார்வையில், சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்திய வங்கிக் கணக்குகளை கண்டறிந்து, அதற்குரிய வங்கிக் கிளைகளுக்கு கடிதம் அனுப்பி மோசடியான கணக்குகளை முடக்கம் செய்தனர். இதன்மூலம் மோசடிக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட தொகை, பாதிக்கப்பட்ட நபர்களிடம் நேரடியாக வழங்கப்பட்டது.



இவ்வாறு ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்திலிருந்து மீட்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.43,53,455 ஆகும். அதில்:
- தில்லை ஆனந்தம் – ரூ.25,45,000
- இளங்கோவன் – ரூ.8,00,000
- சந்தோஷ் குமாரி – ரூ.5,00,000
- ஜெகதா – ரூ.2,11,256
- குகநாதன் – ரூ.1,99,999
- தேன்மொழி கேசவன் – ரூ.97,200
எனத்ததற்கான சான்றிதழ்கள் (Remittance Certificates) இன்று 07.05.2025 அன்று பாதிக்கப்பட்ட நபர்களிடம் நேரடியாக வழங்கப்பட்டன.
மேலும், இம்மோசடியில் தொடர்புடைய இரண்டு பேர் ஏற்கனவே ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வின் வாயிலாக, காவல் துறையின் விரைவான நடவடிக்கையும், பொதுமக்கள் நலனுக்காக எடுத்த நடவடிக்கையும் நன்றியுடன் மக்கள் பாராட்டினர்.