Site Icon

கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு கொடுப்பதற்காக Magic Bricks-ல் விளம்பரம் கொடுத்துள்ளார். கடந்த 02.09.2022-ம் தேதி சுரேஷிடம் அடையாளம் தெரியாத நபர் செல்போனில் தொடர்பு கொண்டு தான் CISF -ல் பணிபுரிவதாகவும் தற்போது பணிமாறுதலில் கோயம்புத்தூர் வர இருப்பதாக கூறி வாடகைக்கு வீடு கேட்டுள்ளார். மேற்படி நபர் இதனை ஒப்புகொண்டு அட்வான்ஸ் தொகை செலுத்துமாறு கூறியதற்கு அந்த அடையாளம் தெரியாத CISF RULES-ன் படி நீங்கள் பணம் செலுத்தினால் செலுத்திய பணத்துடன் சேர்த்து அட்வான்ஸ் தொகையும் கிடைக்கும் என கூறியுள்ளார் இதனை நம்பி சுரேஷ் ரூபாய் 24,999/- பணத்தை அனுப்பியுள்ளார். பின்பு சிறு சிறு தொகையாக மொத்தம் ரூபாய்.7,24,735/- பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் தான் தவறான வழிகாட்டுதலில் சென்று மோசடி அடைந்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சுரேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,இ.கா.ப. அவர்கள் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, முறையான நடவடிக்கை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட நபரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு சுரேஷ் என்பவரது மொத்த தொகையான ரூபாய்.3,66,172/- மீட்கப்பட்டது. இதேபோல் ஜெகதீஸ்வரி என்பவர் ஆன்லைனில் பகுதிநேர வேலைக்காக இழந்த பணம் ரூபாய் 8,60,310/- மீட்கப்பட்டது. மேலும் மீதமுள்ள பணத்திற்கு வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டும், நீதிமன்ற உத்தரவு பெற்று உரியவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

மேற்படி மீட்கப்பட்ட ரூ.12,26,482/- பணத்திற்கான காசோலைகளை இன்று (11.10.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்,இ.கா.ப. அவர்கள் இருவரிடமும் வழங்கினார். பணத்தை திரும்ப பெற்ற இருவரும் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள் ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செய்திகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும் என்றும் சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தியுள்ளார்.