கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் குமார் பகுதி நேர வேலைக்காக ஆன்லைன் மூலம் பார்த்த போது அந்நிய நபரிடமிருந்து வாட்ஸ்-அப்-ல் (WhatsApp) வந்த குறுஞ்செய்தியை நம்பி அதன் மூலம் கிடைக்கப்பெற்ற Telegram ID link-னுள் சென்ற பொழுது சிறிய Task-கள் செய்து கொடுத்து அதன் மூலம் சிறுதொகை இலாபமாக பெற்றுள்ளார். பின்னர் இதனை உண்மை என நம்பியவர் மேலும் முதலீடு செய்து Task-யில் செல்வதற்காக பல பரிவர்த்தனைகள் மூலம் ரூ.17,29,000/- பணம் செலுத்தி அதிக வருமானம் பெறலாம் என்று நம்பி பணம் செலுத்தியுள்ளார். பின்னர் தான் தவறான வழிகாட்டுதலில் சென்று மோசடி அடைந்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அரவிந்த் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, முறையான நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தபட்ட நபர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரூ.5,50,000/- மீட்கப்பட்டது. அதேபோல் சத்யன் என்பவர் இழந்த பணம் ரூ.99,163/-, ரேவதி என்பவர் இழந்த பணம் ரூ.2,63,448/- மற்றும் தங்கராஜ் என்பவர் இழந்த பணம் ரூ.1,74,098/- ஆகியவை மீட்கப்பட்டது. மேலும் மீதமுள்ள பணத்திற்கு வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டும், நீதிமன்ற உத்தரவு பெற்றும் உரியவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
மேற்படி மீட்கப்பட்ட ரூ.10,86,709/- பணத்திற்கான காசோலைகளை இன்று (31.10.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பணத்தை இழந்த நபர்களிடம் வழங்கினார். பணத்தை திரும்ப பெற்ற மேற்படி நான்கு நபர்களும் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள் ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செய்திகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும் என்றும் சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தியுள்ளார்.