கோவை மாநகரில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு. 07.10.2024-ஆம் தேதி கோவை மாநகரம் அவினாசி சாலையில் அமைந்துள்ள அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் இனி மேற்கொண்டு இருசக்கர வாகனங்களில் வரும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கல்லூரிக்குள் வரும்பொழுது தலைக்கவசம் அணியாமல் வந்தால் அவர்களை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனை அனைத்து கல்லூரி முதல்வர்களும் ஏற்றுக்கொண்டு இதை உடனடியாக அமல்படுத்துவதாக உறுதியளித்தார்கள்.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு கல்லூரி நுழைவாயில் முன்பும் “No Helmet, No Entry” என்ற வாசகம் கொண்ட பதாகைகள் வைக்கப்பட்டு சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் அவர்களது வளாகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தலைகவசம் அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் வருவதை உறுதிபடுத்தும். வரும் நாட்களில் இத்திட்டமானது இதர முக்கிய சாலைகளில் அமைந்துள்ள கல்லூரிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். கல்லூரிகளை தொடர்ந்து பள்ளி, அரசு / தனியார் நிறுவனங்கள், மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்தங்கள் என படிப்படியாக மாநகரில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம் கல்லூரி நிர்வாகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்கள் நிர்வாகத்தில் பயிலும் / பணிபுரியும் மாணவர்கள் / பணியாளர்களில் உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பு தங்களுக்கும் உண்டு என்பதை உணர்ந்து இந்த முன்முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.