பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று வழக்கமான குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் வீடுகளில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆதர்ஷ் பசேரா இ.கா.ப. அவர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

அந்தவகையில், அவரது உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. T. மதியழகன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. A. ஆரோகியராஜ், மற்றும் பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. சதீஷ்குமார் ஆகியோரின் முன்னிலை́யில், மாவட்டம் முழுவதும் குற்றப்பின்னணி உள்ள நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது, சந்தேகமான நடவடிக்கைகள், சட்டவிரோத பொருட்கள் மற்றும் குற்ற செயல்களுடன் தொடர்புடைய தகவல்கள் இருந்ததா என்பதையும் காவல்துறையினர் கவனமாக பரிசோதித்து விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆதர்ஷ் பசேரா இ.கா.ப. அவர்கள் கூறியதாவது:
“இந்நிலை சோதனைகள், குற்றவாளிகளின் நடத்தை மற்றும் தங்களின் தற்போதைய செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வழக்கமான நடவடிக்கையாகும். இதனூடாக மாவட்டத்தில் குற்றம் நடைபெறாமல் தடுக்கும் முன்கூட்டிய முனைய நடவடிக்கையாகும்” என தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர், மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் தொடர்ந்து இப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.