சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் கடந்த 14.11.2024 இரவு, வங்கி ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். மறுநாள் 15.11.2024 காலை, வங்கி திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து வங்கியின் மேலாளர் D-1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்யப்பட்டதன் பின்னர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. ஆ. அருண், இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் A. ஷபீர் அகமது தலைமையில் ஒரு சிறப்புப் படை அமைக்கப்பட்டது. இதில் தலைமை காவலர் பிரேம்நாத், முதல் நிலை காவலர் சக்திவேல், காவலர்கள் தமிமுல் அன்சாரி, அன்பழகன், மற்றும் மணிகண்டன் ஆகியோர் இடம்பெற்றனர்.
குற்றவாளி கண்டறிதல்:
தனிப்படையினர் முதலில் வங்கியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் ஒரு நபர் வங்கிக்குள் சென்று பின் வெளியே வருவதும், வங்கியில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகள் எந்தவித சேதமும் அல்லது திருட்டும் ஏற்படாததும் தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காண, குழுவினர் 25க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தினர். இத்துடன், தீவிர விசாரணை நடத்தி, வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபரை வெற்றிகரமாக கண்டறிந்து கைது செய்தனர்.
காவல்துறைக்கு கமிஷனர் பாராட்டு:
வழக்கு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை பிடித்த தனிப்படையினரின் திறமையான செயல்பாட்டை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார். இன்று, 19.11.2024, அந்த தனிப்படையினரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து, வெகுமதி வழங்கி ஊக்கமளித்தார்.
இந்த சம்பவம், சென்னை காவல்துறையின் ஒழுங்கான திட்டமிடல், புத்திசாலித்தனமான விசாரணை திறன் மற்றும் துரித செயல்பாட்டின் சிறப்பான உதாரணமாகும்.