சென்னை பெருநகர காவல் துறையில் 2,256 ஊர்க்காவல் படையினர் (ஆண்கள்-1,986, பெண்கள்-270) பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சென்னை பெருநகரில் உள்ள 104 காவல்நிலையங்கள் மற்றும் 56 போக்குவரத்துக்காவல் நிலையங்களில் சட்டம் & ஒழுங்கு, இதர ரோந்து பணிகள், கோவில் திருவிழாக்கள், பண்டிகை நாட்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், இயற்கை பேரிடர் காலங்களில், காவல் துறையினருடன் இணைந்து பொதுமக்களுக்கு உதவுதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளில் காவல்துறையினருக்கு பக்கபலமாக பணிபுரிந்து வருகின்றனர்.

 இவர்களின் பணிதிறனை மேம்படுத்தும் பொருட்டு கடந்த 21.04.2023 அன்று நடந்த காவல்துறை மானிய கோரிக்கையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் காவலர் பல்பொருள் அங்காடி வசதி ஊர் காவல்படையினருக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். இது தொடர்பாக 22.08.2023 அன்று அரசாணை எண்.452 தமிழக அரசால் வெளியிடப்பட்டது.

 மேற்கண்ட அரசின் ஆணையை செயல்படுத்தும் விதமாக (24.09.2024) மதியம் வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .அருண், .கா. அவர்கள் கலந்து கொண்டு, சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் ஊர் காவல் படையினர் (Home Guards), காவலர் அங்காடியில் பொருட்கள் வாங்கும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தை துவக்கி வைத்து காவலர் பல்பொருள் அங்காடி அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதன் மூலம் ஒவ்வொரு ஊர்க்காவல்படையினரும் மாதம்  ரூ.15,000-க்கு மளிகை பொருட்களும், வருடத்திற்கு ரூபாய்.1,50,000-க்கு மின்சாதன வீட்டு உபயோக பொருட்களும் பெற்று கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சி சரத்கர், இ.கா.ப, (தலைமையிடம்),   துணை ஆணையாளர்கள் இராதாகிருஷ்ணன் (மோட்டார் வாகன பிரிவு), I.ஜெயகரன், (ஆயுதப்படை-1), திரு.S.அன்வர்பாஷா, (ஆயுதப்படை-2), காவல் அதிகாரிகள், ஊர்க்காவல் படை அதிகாரிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.