கடலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரின் தீவிர கண்காணிப்பிலும், விழிப்பான நடவடிக்கையிலும், ஒரு முக்கிய மது கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் அவர்களின் மேலாண்மையிலும், காவல் ஆய்வாளர் பாலாஜி அவர்களின் நேரடி தலைமையிலும், உதவி ஆய்வாளர் சிவகுருநாதன், தலைமை காவலர்கள் சுந்தர்ராஜன் மற்றும் ஆனந்தபாபு ஆகியோர் இணைந்து சாவடி சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது, TN31CF7112 என்ற பதிவு எண்ணை கொண்ட ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்த ஆண்டார்முள்ளிப்பள்ளம், சுப்பம்மாள் சத்திரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலகுரு (வயது 48), தந்தை பெயர் குழந்தைவேல் என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அவர் பயன்படுத்திய வாகனத்தில் சோதனை மேற்கொண்ட போது, விற்பனைக்கு கடத்தி வந்திருந்த புதுச்சேரி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட பல வகையான மதுப்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் பின்வரும் அளவிலான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன:

  • All Ways Brandy (90 ml) – 288 பாட்டில்கள்
  • Super Brandy (90 ml) – 12 பாட்டில்கள்
  • Brandy (90 ml) – 12 பாட்டில்கள்
  • Mansion House Brandy (90 ml) – 1 பாட்டில்

இதுகுறித்து கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில் குற்ற எண் 302/2025 ஆக பதிவு செய்யப்பட்டது. இவர் மீது தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் மதுபான தடைக் சட்டம் (TNP Act) பிரிவுகள் 4(1)(C), 4(1)(A), மற்றும் 14A உட்பட உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுவிலக்கு காவல்துறையினரின் தொடர்ந்து நடைபெற்றும் வரும் இந்த சோதனைகள், சட்ட விரோதமாக நடைபெறும் போதை பொருட்கள் மற்றும் மதுபான கடத்தலை கட்டுப்படுத்தும் முயற்சியில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.