சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் இணையவழி குற்றத் தடுப்பு விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. A. அருண், இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், காவல் கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) மற்றும் மத்திய குற்றப்பிரிவு பொறுப்பாளர் திரு. G. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் தலைமையில், திரைப்பட நடிகர் திரு. சந்தானம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இன்று (08.03.2026) காலை சுமார் 8.00 மணியளவில் இணையவழி குற்றத் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று, மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து கண்ணகி சிலை வரை பேரணியாக சென்றனர். ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி, நியூ கல்லூரி, லயோலா கல்லூரி, பிரெசிடென்சி கல்லூரி, குரு நானக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, ஸ்ரீ கந்தசாமி நாயுடு கல்லூரி மற்றும் அண்ணா ஆதர்ஷ் பெண்கள் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் இணையதள குற்றங்கள், ஆன்லைன் வர்த்தக மோசடி, டிஜிட்டல் கைது மோசடி, திருமண வரன் மோசடி, ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி, இணையவழியில் மிரட்டி பணம் பறிக்கும் மோசடி, பெண்களை இணையத்தில் பின்தொடர்தல் போன்ற குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். சமூக வலைத்தளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பதையும் பொதுமக்களிடம் வலியுறுத்தினர்.

மேலும் இணையவழி குற்றங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவசர உதவி தேவையான சூழலில் 1930 என்ற இணைய குற்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பேரணியின்போது உரையாற்றிய திரைப்பட நடிகர் சந்தானம், இணையவழி குற்றங்களுக்கு ஆளாகாமல் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மாணவர்கள் இணையத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் தனக்கே உரிய பாணியில் வலியுறுத்தினார். தொடர்ந்து உரையாற்றிய காவல் கூடுதல் ஆணையாளர் திரு. G. கார்த்திகேயன் அவர்கள், சமீப காலமாக இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துணை ஆணையாளர் முனைவர் ந. ஸ்ரீநாதா, இ.கா.ப., அவர்கள் பேசுகையில், கடந்த 01.01.2025 முதல் 28.02.2026 வரை சென்னை பெருநகர காவல்துறையில் மொத்தம் 3,692 இணையவழி குற்ற புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 164 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் இணையவழி குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் ரூ.365 கோடி பணத்தை இழந்துள்ளதாகவும், காவல் ஆணையாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் ரூ.38.3 கோடி தொகை மீட்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் திருமதி V.V. கீதாஞ்சலி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.