சமீப காலமாக சைபர்கிரைம் பிரிவில், Courier, TRAI மற்றும் Skype மோசடிகள் குறித்த புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடிகள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களை குறிவைத்து, காவல்துறை, CBI அல்லது TRAI போன்ற அதிகாரிகளாக தங்களை சித்தரித்து அழைப்புகளை செய்கின்றனர். இவர்கள் சட்டத்திற்கு புறம்பான பார்சல்கள், பணமோசடிகள் போன்ற குற்றச்சாட்டுகளை மக்களிடம் முன்வைத்து, மக்களை பணம் பரிமாற்றம் செய்யவோ அல்லது தனிப்பட்ட தகவல்களை பகிரவோ மிரட்டுகின்றனர்.

இவர்கள் Skype அல்லது WhatsApp வீடியோ அழைப்புகளை பயன்படுத்தி, காவல்துறை அதிகாரிகளாக உருவகப்படுத்தி பலரை மோசடியில் ஏமாற்றி உள்ளனர். எந்தவொரு உண்மையான அதிகாரியும் மக்களை தொடர்புகொண்டு பணம் கேட்பதோ அல்லது இத்தகைய சேவைகளின் மூலம் கைது மிரட்டல்களை செய்வதோ இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

இந்த மோசடிகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சென்னை மாநகர காவல்துறை சைபர் குற்றப்பிரிவு, நடிகர் திரு.யோகி பாபு அவர்கள் பேசிய ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது. இவ்வீடியோவில், அவர் இந்த மோசடிகளை விளக்கி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார். இத்தகைய அழைப்புகளைப் பெற்றால் உடனடியாக அந்த அழைப்பை துண்டிக்கவும் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது CYBER CRIME HELPLINE எண்ணான 1930 க்கு அழைக்கலாம் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.