தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்சங்கர் ஜிவால், IPS, மற்றும் சைபர் கிரைம் பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் சந்திப் மிட்டல், IPS, அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சைபர் குற்றங்களைத் தடுக்கும் வழிமுறைகள், இலவச உதவி எண் – 1930, புகார் அளிக்க வேண்டிய இணையதளம் – www.cybercrime.gov.in ஆகிய தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.சிவபிரசாத், இ.கா.ப., அவர்கள் பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் ஆட்டோக்களில் ஒட்டிவைத்து விழிப்புணர்வு நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் R. ஜெரால்டு அலெக்சாண்டர், தேனி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமணிய பாலசந்திரா, இ.கா.ப., காவல் ஆய்வாளர்கள், சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் S. தாமரைக்கண்ணன், மற்றும் காவல்துறையினர், பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையின் இந்த முயற்சி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.