பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கூகுளில் கார் விற்பனை தொடர்பாக தேடி அதில் வந்த விளம்பரத்தை நம்பி அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு டெலிவரி மற்றும் இதர கட்டணங்களுக்காக மொத்தம் 4,07,400/- ரூபாயை எதிரி குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பியதாகவும், ஆனால் காரை டெலிவரி செய்யாமல் மோசடி செய்து ஏமாற்றியதாக பெரம்பலூர் சைபர் குற்ற காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் குற்ற எண் 05/2024-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திருமதி.கயல்விழி உதவி ஆய்வாளர் திரு.S. மனோஜ், உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) செல்வி.A. சிவமீனா, தலைமை காவலர்கள் சுரேஷ், சதீஷ்குமார், முதல்நிலை காவலர் கலைமணி, காவலர்கள் ரியாஸ் அகமது மற்றும் முத்துசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று 13.06.2024 -ம் தேதி மேற்படி மோசடியில் ஈடுபட்ட நாகராஜ் (36) த/பெ ரெங்கராஜ், ஜெயந்தி காலனி கொட்டம்பட்டி, பள்ளப்பட்டி அஞ்சல் திண்டுக்கல் மாவட்டம் (தற்போது பழைய கரூர் ரோடு கருப்பையா பிள்ளை தெரு, N.S நகர் திண்டுக்கல்.) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து பணம் ரூபாய் 2,07,400/-, செல்போன் மற்றும் சிம் கார்டு ஆகியவற்றை கைப்பற்றிய சைபர் குற்ற காவல்நிலைய காவல்துறையினர் எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபோன்று யாரும் சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி கார், விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை வாங்கும் ஆசையில் தாங்கள் உழைத்து சிறுக சிறுக சேர்த்த பணத்தை இழந்துவிட வேண்டாம் என்றும் நம்பகத்தன்மையற்ற செயலிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வலைதளப்பக்கங்கள் ஆகியவற்றில் பணத்தை ஏமாந்து விடாமல் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் கூறினார்கள்.

மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரியை கைது செய்த சைபர் குற்ற காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.சைபர் குற்றங்களில் பணத்தை இழந்த 24 மணி நேரத்திற்குள 1930 -என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டால் எதிரிகளின் வங்கி கணக்கை முடக்கம் செய்யலாம். இதர சைபர் குற்றங்கள் சம்மந்தமாக www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.