மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு) G.S. அனிதா அவர்கள், ‘போலீஸ் அக்கா’ திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 89 பெண் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கினார். இந்த பயிற்சியில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், மாணவிகளின் பிரச்சினைகள், மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும், மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் பிரசுரங்கள் (ப்ரோசர்) விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், வரதட்சனை தடுப்பு பிரிவு காவல் உதவி ஆணையர் மற்றும் குழந்தைகள் மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



‘போலீஸ் அக்கா’ திட்டம், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண் காவலர்களை தொடர்பு அலுவலர்களாக நியமிக்கும் ஒரு முயற்சியாகும். இத்திட்டத்தின் மூலம், மாணவிகள் தங்களின் பிரச்சினைகள் மற்றும் கவலைகளை நேரடியாக பெண் காவலர்களுடன் பகிர்ந்து, தேவையான உதவிகளை பெற முடியும். இந்த நடவடிக்கை, மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், அவர்களின் நம்பிக்கையையும் உயர்த்துகிறது.
மதுரை மாநகர காவல் துறை, சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, இத்தகைய திட்டங்களை செயல்படுத்தி, மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.