சென்னை, நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்த மணி, வ/26 என்பவர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் எதிரில் காய்கறி கடை நடத்தி வருகிறார். மணி நேற்று (17.08.2023) மாலை காய்கறி கடையிலிருந்தபோது, 1 நபர் மணியின் கடையில் காய்கறி வாங்கிவிட்டு, ரூ. 500 ரூபாய் நோட்டுகள் 4 கொடுத்தார். மணி அதை வாங்கி பார்த்தபோது கள்ளநோட்டு போல சந்தேகம் ஏற்படவே, உடனே மணி காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், F-3 நுங்கம்பாக்கம் காவல் குழுவினர் மேற்படி கடைக்கு சென்று விசாரித்தபோது, அந்த நபர் கொடுத்த பணம் கள்ள நோட்டு என தெரியவந்ததின்பேரில், காவல் குழுவினர் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

                 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., அறிவுரையின்பேரில், கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திஷா மிட்டல், இ.கா.ப. ஆலோசனையின் பேரில், திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப,. நேரடி மேற்பார்வையில் F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் அண்ணாமலை, (முன்னாள் இராணுவ வீரர்) வ/65, த/பெ.அர்ஜுன், பாலாஜி நகர், பள்ளிக்கரணை, சென்னை என்பதும், இவரது நண்பர் சுப்ரமணியன் (வழக்கறிஞர்), வ/62, த/பெ.வீரப்பன், ஸ்டேட் பேங்க் காலனி 3வது தெரு, விருகம்பாக்கம், சென்னை என்பவருடன் சேர்ந்து விருகம்பாக்கத்தில் ஒரு இடத்தில் பிரிண்டிங் மற்றும் கட்டிங் இயந்திரங்களை வைத்து மேற்படி 500 ரூபாய் கள்ள நோட்டுகளை தயாரித்ததும் தெரியவந்தது.

அதன்பேரில், F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து மேற்படி கள்ள நோட்டுகள் தயாரித்த எதிரிகள் சுப்ரமணியன் மற்றும் அண்ணாமலை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.45.2 இலட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள், பிரிண்டிங் இயந்திரம், பேப்பர் கட்டிங் இயந்திரம், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

         கைது செய்யப்பட்ட 2 நபர்களும் விசாரணைக்கு பின்னர் இன்று (18.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.