கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E. சுந்தரவதனம் IPS அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், “போலீஸ் அக்கா” திட்டத்தின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் கல்லூரி மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உடனுக்குடன் கவனத்தில் கொண்டு தீர்வுகளை வழங்குவது. இத்திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பெண் காவலர் நியமிக்கப்பட்டு, அந்த கல்லூரியின் மாணவிகளுடன் நேரடியாக தொடர்பில் இருக்கிறார்.

பெண் காவலர்கள் கல்லூரிகளுக்கு சென்று மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களுடைய பிரச்சனைகள் மற்றும் பாதுகாப்பு தேவைகள் குறித்த விபரங்களைப் பெற்றனர். மேலும், அவசர காலங்களில் தொடர்பு கொள்ள “போலீஸ் அக்கா”வின் தொலைபேசி எண்ணை மாணவிகளுக்கு வழங்கினர். இதன் மூலம், மாணவிகள் தங்கள் தேவைகளை நேரடியாக பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு பெறுகிறார்கள்.

சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள், உளவியல் கொடுமைகள், ஆணவக் கொலைகள் போன்ற பிரச்சனைகள் குறித்து தகவலளிக்கப்பட்டது. சட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவற்றின் பயன்பாடுகள் தெளிவாக கூறப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் IPS, துணை காவல் கண்காணிப்பாளர்கள் சந்திரசேகரன், மகேஷ்குமார், பார்த்திபன், நல்லசிவம் மற்றும் பலர் பங்கேற்று, மாணவிகளுக்கு பயனுள்ள தகவல்களை வழங்கினர்.

இந்த முயற்சிகள், கல்லூரி மாணவிகளின் மன உறுதியை அதிகரித்து, பாதுகாப்பான மற்றும் விழிப்புணர்வான சமூகத்தை உருவாக்க உதவியாகும் எனக் கூறப்படுகிறது. “போலீஸ் அக்கா” திட்டம் மாணவிகளுக்கு ஒரு ஆதரையாக மட்டுமின்றி, அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் சிறந்த முயற்சியாக அமைகிறது.