தேனி மாவட்டம், ஜூன் – 26 உலக போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, பங்களாமேடு பகுதியில் காவல்துறையின் சார்பில் சர்வதேச போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன பேரணி மற்றும் தேனி கம்மவார் சங்கம் கல்லூரியில் மாணவர்களிடம் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர்.சிவபிரசாத், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (26.06.2024) நடைபெற்றது.
போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் ஒழித்து போதைபொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மது, கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பேரணிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியானது பங்களாமேடு பகுதியில் தொடங்கி நேருசிலை, பழைய பேருந்து நிலையம், பெரியகுளம் சாலை வழியாக தேனி-அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவில் வரை சென்று நிறைவு பெற்றது.
தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து தகவல் தெரிவிப்பதற்கான புகார் எண் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒட்டி விழிப்புணர்வு பணிகளை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தேனி கம்மவார் சங்கம் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
தற்போது இளைய சமுதாயத்தினரை நல்வழியில் கொண்டு செல்ல கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாதந்தோறும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தி போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதைப்பொருட்கள் பயன்படுத்துவதனால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுவது மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு, ஆரோக்கியமற்ற சமுதாயம் உருவாக காரணமாகிறது. இதனை தவிர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆலோசனை மையங்கள் மூலம் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து 93638 73078 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் பாதுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவர்கள் தெரிவித்தார்.
பின்னர், விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சாளர்களின் கருத்துரையும் நடைபெற்றது.
இன்று மாலை பங்களாமேடு பகுதியிலிருந்து, நேரு சிலை வழியாக, கான்வன்ட் பள்ளி வரை பள்ளி மாணவர்களின் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறும், கோசங்கள் எழுப்பியவாறும் சென்றனர்.
இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (கலால்) திரு.ரவிச்சந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பார்த்தீபன், மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் ரவிசக்கரவர்த்தி, மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, கம்மவர் சங்க கல்லூரி முதல்வர் திரு.சீனிவாசன், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் (பொ) திரு.விஜயலெட்சுமி, உள்ளிட்ட பலர்,தேனி நகர் காவல் ஆய்வாளர் உதயக்குமார், பழனிச்செட்டிபட்டி காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன்,மதுவிலக்கு காவல் ஆய்வாளர் செல்வக்குமாரி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் நந்தக்குமார்,சார்பு ஆய்வாளர்கள் மாயன், ஜீவானந்தம், கருப்பசாமி மற்றும் காவல் ஆளுநர்கள் சமூக ஆர்வலர்கள் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.